நீலகிரி மாவட்டம் குன்னூர் சித்தி விநாயகர் கோயில் தெரு பகுதியில் கஞ்சா தடுப்புக்காக அமைக்கப்பட்ட தனிப்படையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்தப் பகுதியில் வீடுகளிலேயே கஞ்சா செடிகள் வளர்த்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சா செடி வளர்த்து வந்த அன்புமணி, சிவா ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து செடிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் இதே பகுதியில் கஞ்சா வைத்திருந்த வினோத் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட மூவரும் குன்னூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீலகிரி சிறையில் அடைக்கப்பட்டனர்.
நீலகிரி மாவட்டத்தில் சமீப காலமாக கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
இதையடுத்து சட்டவிரோதமாக நடைபெற்று வரும் கஞ்சா விற்பனையை தடுக்கும் விதமாக குன்னூரில் டிஎஸ்பி சுரேஷ் தலைமையில் தனிப்படையினர் அமைக்கப்பட்டு ஆங்காங்கே சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அதன்படி நடைபெற்ற சோதனையில் வீட்டிலேயே கஞ்சா செடி வளர்த்து வந்த இருவர் மற்றும் கஞ்சா விற்பனையாளர் ஒருவர் என ஒரே நாளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: நாகை அருகே சாராயம் கடத்தல்: மடக்கிப்பிடித்த பொதுமக்கள்!