சென்னை திருவேற்காடு அடுத்த மேல் அயனம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஜலால்(27). இவர் அதே பகுதியில் இறைச்சிக் கடை நடத்தி வருகிறார்.
நேற்றிரவு (செப்.14) கடைக்குள் நான்கு ஆடுகள் மற்றும் 15 கோழிகளை வைத்து விட்டு சென்றார். வழக்கம்போல் இன்று (செப்.15) காலை கடையை திறந்து பார்த்தபோது, கடைக்குள் இருந்த ஆடு மற்றும் கோழிகள் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதனையடுத்து, உடனடியாக திருவேற்காடு காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் பேரில் திருவேற்காடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இதனிடையே திருநின்றவூர் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது சந்தேகத்திற்கிடமாக காரில் வந்த நபர்களை மடக்கி விசாரித்ததில் திருவேற்காட்டிலிருந்து ஆடு, கோழிகளை திருடி வந்ததாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அவர்கள் திருவேற்காடு காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதனைத்தொடர்ந்து அவர்களிடம் சப் இன்ஸ்பெக்டர் சைமன் நடத்திய விசாரணையில், பொன்னேரியைச் சேர்ந்த அஜய்(23), அஜித்(22), என்பதும், காரில் வந்து திருவேற்காடு பகுதியில் ஆடுகள் மற்றும் கோழிகளை திருடிச் சென்றது தெரியவந்தது.
இவர்களிடமிருந்து நான்கு ஆடுகள், கோழிகள் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், தலைமறைவாக உள்ள இவர்களது கூட்டாளியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: போதை பொருள் வழக்கு: ராகினி திவேதிக்கு 15 நாள் காவல் நீட்டிப்பு!