ஈரோடு தொட்டாபாளையம் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலொன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அப்பகுதியிலுள்ள ரயில்வே இருப்புப்பாதையை சட்டெனக் கவனித்த சரக்கு ரயில் ஓட்டுநர் இருப்புப்பாதையில் குவியலாக ஏதோ பொருள் கிடப்பதை உணர்ந்து உடனடியாக ரயிலை நிறுத்தியதுடன், ரயில்வே நிலைய ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து ரயில்வே ஊழியர்கள் இருப்புப்பாதைக்கு அருகே சென்று பார்த்த போது அங்கு இருப்புப்பாதையின் நடுவில் கான்கிரீட் கற்கள் கொட்டப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவற்றை அகற்றி சரக்கு ரயில் செல்வதற்கு வழியை ஏற்படுத்தினர். மேலும், இது குறித்து ஈரோடு ரயில்வே காவல்துறையினருக்குப் புகார் தெரிவிக்கப்பட்டது.
அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், இருப்புப்பாதையின் நடுவில் கான்கிரீட் கற்களை குவித்து சரக்கு ரயிலை கவிழ்க்க முயன்றவர்களைத் தீவிரமாக தேடி வந்தனர். ரயில்வே காவல்துறையினரின் தீவிர விசாரணையில், ஈரோட்டைச் சேர்ந்த விஜயகுமார், சதீஷ்குமார் ஆகிய இருவரும் சேர்ந்தே இருப்புப்பாதையின் நடுவே கான்கிரீட் கற்களை குவித்து வைத்தது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து இருப்புப்பாதையின் நடுவில் சட்டவிரோதமாக கற்களைக் கொட்டி சரக்கு ரயிலை கவிழ்க்க சதி வழக்கில் இளைஞர்கள் இருவரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களை சிறைக்காவலுக்கு அனுப்பி வைத்தனர்.