கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள செம்மேடு பகுதியைச் சேர்ந்தவர் சரவணகுமார். இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். சரவணகுமாரின் நண்பர்கள் கார்த்தி, முருகேஷ் ஆகியோர் ஒன்றாக சேர்ந்து பல்வேறு இடங்களுக்குச் சென்று கூலித்தொழில் செய்துவந்துள்ளனர். இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை இரவு மூன்று பேரும் ஒன்றாக மது அருந்திவிட்டு சரவணகுமார் வீட்டுக்கு சென்றுள்ளனர்.
அப்போது, வீட்டில் இருந்த சரவணகுமாரின் ஆறு வயது குழந்தையை மிட்டாய் வாங்கித்தருவதாகக்கூறி கார்த்தி, முருகேஷ் இருவரும் அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் இரண்டு மணி நேரம் கழித்து குழந்தையை வீட்டில் கொண்டு வந்து இருவரும் விட்டுச் சென்றனர். இதையடுத்து, குழந்தையின் உதடுகளில் ரத்தம் வழிந்ததை பார்த்த சரவணகுமார் குழந்தையிடம் விசாரித்ததில் கார்த்தி, முருகேஷ் இருவரும் பாலியல் வன்புணர்வு செய்தது தெரியவந்தது.
இதில், பலத்த காயமடைந்த குழந்தைக்கு கோவை அரசு மருத்துவமனை கடந்த இரண்டு நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, சரவணகுமார் ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் தப்பிய ஒடிய இருவரையும் காவல் துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இதனிடையே, தலைமறைவான கார்த்தி, முருகேஷ் இருவரையும் காவல் துறையினர் பிடித்தனர். இதனைத் தொடர்ந்து, பொள்ளாச்சி மகளிர் காவல் துறையினர் இருவரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்து, கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: குழந்தைகளின் ஆபாச காணொலி - சென்னையில் சிபிஐ சோதனை