மதுரை: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா, திருப்பரங்குன்றம் மலை மீது காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் சிக்கந்தர் பாவா தர்கா உள்ளன. இங்குள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் கடந்த 1967ஆம் ஆண்டுவரை கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. பின்னர், இந்து, இஸ்லாமியர் பிரச்னை காரணமாக மலை உச்சி கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்ற தடை விதிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து, இந்து அமைப்புகள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி பெற்றனர். இருந்தாலும், சட்டம் ஒழுங்கு மற்றும் பல்வேறு காரணங்களுக்காக, காவல் துறையினர் உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே தீபம் ஏற்ற அனுமதிக்கின்றனர்.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணியளவில், இந்து முன்னணியைச் சேர்ந்த சிலர் மலை உச்சியில் உள்ள கைலாசநாதர் கோயில் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றினர்.
இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, தீபம் ஏற்றியவர்களைத் தேடி வந்தனர். இதற்கிடையில், இவ்வழக்கு தொடர்பாக, இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட செயலாளர் பொறுப்பிலுள்ள, வில்லாபுரத்தை சேர்ந்த செல்வகுமார் மற்றும் கீரைதுறையை சேர்ந்த அரசுபாண்டி ஆகிய இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். இவர்கள் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஓசூர் சிகரெட் நிறுவன அலுவலர் கடத்தல்: மேலும் 6 பேர் கைது