சென்னை அசோக்நகர் 79 ஆவது செக்டார் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் பாண்டியன் (45). கேஸ் ஏஜென்சி நிறுவனங்களுக்கு உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வரும் பாண்டியன் வீட்டிற்கு, கடந்த 9 ஆம் தேதி மாலை வந்த சிலர், தங்களை போலீஸ் என அறிமுகப்படுத்திக்கொண்டு, லைசென்ஸ் இல்லாமல் துப்பாக்கி வைத்திருப்பதாக தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும், ஆகையால் உங்கள் வீட்டை சோதனையிட வேண்டும் எனவும் பாண்டியனிடம் கூறியுள்ளனர்.
தன்னிடம் துப்பாக்கியே இல்லை என்று சொன்ன பாண்டியனை பொருட்படுத்தாத அவர்கள், பின்னர் பீரோவில் இருந்த 12 லட்சம் ரூபாய் பணம், 45 சவரன் நகை, செல்போன் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு, பாண்டியன் மற்றும் அவரது குடும்பத்தினரை உள்ளே வைத்து பூட்டி விட்டு தப்பியுள்ளனர். பின்பு, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வெளியே வந்த பாண்டியன், இது குறித்து அசோக்நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பாண்டியன் மற்றும் அவரது நண்பரான பாரதியார் இணைந்து சாலிகிராமத்தில் நடத்தி வரும் கேஸ் ஏஜென்சி குடோன் தொடர்பான கொடுக்கல் வாங்கல் பிரச்சனை காரணமாக இக்கொள்ளை நடந்திருக்குமா என்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே கொள்ளை தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
அதில், காவல்துறையினர் பயன்படுத்தும் வாகனம் போல ஸ்டிக்கர் ஒட்டிய வாகனத்தில் வரும் 7 பேர் கொண்ட கும்பல், வெளியே சென்று விட்டு வரும் பாண்டியனிடம் ஏதோ பேசி உள்ளே அழைத்துச் செல்கிறது. பத்து நிமிடங்கள் கழிந்த பின், அவரது நான்கு சக்கர வாகனத்தை சோதனையிடுவதாகக் கூறி வாகன சாவியை பிடுங்கிக் கொண்டு ஓரமாக நிறுத்தி வைத்திருந்த வாகனத்தை திருப்பி தயார் நிலையில் வைக்கின்றனர்.
பின்னர், அவரது வீட்டில் இருந்து பணம், நகைகளை எடுத்துக் கொண்டு இரண்டு வாகனங்களிலும் அக்கும்பல் தப்பிச் செல்கிறது. பாண்டியன் வெளியே சென்று வருவதை பின்தொடர்ந்து வந்து திட்டமிட்டு இந்நிகழ்வு நடந்திருப்பது தெரியவந்துள்ளது. கடத்திச்சென்ற பாண்டியனின் வாகனத்தை கே.கே. நகரில் விட்டுவிட்டு பின்பு அக்கும்பல் ஆட்டோவில் சென்றதும் தெரியவந்துள்ளது. இந்த சிசிடிவியை வைத்து காவல்துறையினர் அந்த கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆள் கடத்தல் வழக்கில் ரவுடி சீசிங் ராஜா கைது!