திருச்சிராப்பள்ளி: வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 2 வயது குழந்தை உயிரிழந்தது.
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 38 ஆவது வட்டம் கே.சாத்தனூர் அருகே கணக்கன்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி ராஜேஷ்வரி. இவர்களது இரண்டு வயது குழந்தை ஹரிகிருஷ்ணன்.
ஹரி கிருஷ்ணன் நேற்று (டிச., 19) மாலை வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தான். அப்போது வீட்டின் பக்கவாட்டு சுவரின் ஒருபகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதில் ஹரிகிருஷ்ணன் இடுபாடுகளுக்கிடையில் சிக்கிக்கொண்டான். இடிபாடுகளுக்குள் சிக்கிய சிறுவனை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர்.
ஆனால் குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தார். சில நாட்களாக திருச்சியில் பெய்த மழையின் காரணமாக உறுதி தன்மையை இழந்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததால், இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கேகே நகர் காவல் துறையினர், குழந்தையின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.