திருச்சிராப்பள்ளி: திருநங்கை பயிற்சி காவலர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பாக பள்ளியின் முதல்வர், துணை முதல்வர் ஆகியோரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலைய சரகம் அண்ணாநகர், போலீஸ் காலனி அருகே காவலர் பயிற்சிப் பள்ளி உள்ளது. திருச்சியும், அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்தும் காவல் துறை பணிக்கு தேர்வாகும் காவலர்களுக்கு, இந்தப் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி அளிக்கப்படும். இங்கு ஏடிஎஸ்பி நிலையில் உள்ள காவல் அலுவலர் பயிற்சிப் பள்ளியின் முதல்வராகவும், டிஎஸ்பி நிலையில் இருப்பவர் துணை முதல்வராகவும் பதவி வகிப்பார்கள்.
அந்தவகையில் திருச்சி நவல்பட்டு காவலர் பயிற்சிப் பள்ளியில் முத்துக்கருப்பன் என்பவர் முதல்வராகவும், மனோகரன் என்பவர் துணை முதல்வராகவும் உள்ளனர். இச்சூழலில், ஐந்து மாதங்களுக்கு முன்பு முதல் திருச்சியையும், அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் தேர்வு செய்யப்பட்ட பெண் காவலர்களுக்கும் இங்கு பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது.
இவ்வேளையில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கையான சம்யுத்தா (21) என்பவர் காவல் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு இங்கு பயிற்சி பெற்று வருகிறார். இவரது சொந்த ஊர் தேனி மாவட்டம் ஆகும். எனினும் இவர் புதுக்கோட்டையில் உள்ள ஒரு குடும்பத்திற்கு தத்து கொடுக்கப்பட்டுள்ளார்.
இதனால் அவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து காவல் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு மருத்துவ பரிசோதனையில் பெண் தன்மை அதிகமாக இருந்ததால், பெண் காவலர்களோடு இணைந்து பயிற்சி பெற்றுவருகிறார். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பயிற்சிப் பள்ளி முதல்வரும், துணை முதல்வரும் பாலியல் ரீதியாக சம்யுத்தாவை துன்புறுத்தியதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து சம்யுத்தா காவல் பயிற்சி பள்ளி டிஐஜி சத்திய பிரியாவுக்கு தொலைபேசி மூலம் புகாரளித்தார். இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் சில தினங்களுக்கு முன்பு பயிற்சி பள்ளிக்கு வந்து விசாரணை மேற்கொண்டார். இந்த விசாரணைக்கு சம்யுத்தா தான் காரணம் என்று கூறி பயிற்சிப் பள்ளியின் உதவி ஆய்வாளரும், தலைமை காவலரும் சேர்ந்து சம்யுக்தாவைத் திட்டியுள்ளனர்.
இதனால் அச்சமடைந்த சம்யுத்தா நேற்று பிற்பகலில் நஞ்சருந்தியுள்ளார். இது குறித்து அறிந்த அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது .
மேலும், இது தொடர்பாக வழக்குப்பதியப்பட்டு நவல்பட்டு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். சம்யுத்தா கூறிய பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் நடத்திய விசாரணையின் அறிக்கை இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை. இந்நிலையில் பயிற்சிப் பள்ளி நிர்வாகிகளின் மிரட்டல் காரணமாக சம்யுத்தா தற்கொலைக்கு முயன்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தொடர் மிரட்டல் காரணமாக தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சம்யுத்தா தற்கொலைக்கான காரணத்தை மாற்றிக் கூறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தனக்கு பயிற்சி பெறும் அளவுக்கு உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தால் தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்துள்ளார். இவரது இத்தகைய வாக்கு மூலமே நவல்பட்டு காவல் துறையினரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. பயிற்சிப் பள்ளியின் முதல்வர், துணை முதல்வர் ஆகியோரை சட்டரீதியாக காப்பாற்றும் நோக்கத்தோடு இத்தகைய வாக்குமூலம் பெறப்பட்டதாக கூறப்படுகிறது.
எனினும் பாலியல் புகாரில் சிக்கிய காவல் அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை இருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது பாலியல் புகாரில் சிக்கியுள்ள துணை முதல்வர் மனோகரன், ஏற்கனவே திருச்சியில் பணியாற்றியபோது பாலியல் புகாரில் சிக்கியுள்ளார். இதன் காரணமாக அவர் திருச்சியில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது மீண்டும் அவர் திருச்சி காவலர் பயிற்சி பள்ளி துணை முதல்வராக பணியாற்றி வரும் நிலையில், மீண்டும் பாலியல் புகாரில் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.