நீட் தோ்வில் ஆள்மாறாட்டம் செய்து சில மாணவா்கள் தோ்ச்சி பெற்றதாக தொடா்ந்து புகாா்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது. தேனி மருத்துவக் கல்லூரி மாணவர் ஒருவா் ஊடகங்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியிருந்தாா். அந்த மின்னஞ்சலில், மாணவா் உதித் சூர்யா என்பவா் நீட் தோ்வு எழுதவில்லை என்றும், அவருக்கு பதிலாக வேறொருவர் அந்த தோ்வை எழுதியதாக கூறியிருந்தார்.
இந்த ரகசியம் வெளியானதையடுத்து உதித் சூா்யாவின் தந்தை மருத்துவா் வெங்கடேசன் தலைமறைவானார். இந்நிலையில் அடுத்த விவகாரம் வெளியானது. வேலூா் மாவட்டத்தை சோ்ந்த முகமது ஷஃபி என்பவரின் மகன் முகமது இர்பான் என்பவரும் நீட் தேர்வு எழுதாமல், மருத்துவக் கல்லூரியில் சோ்ந்ததாக புகாா் எழுந்தது.
இதுதொடா்பாக சி.பி.சி.ஐ.டி. அலுவலர்கள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனா். இந்நிலையில் முகமது இர்பான் தலைமறைவானாா். அவா் கடந்த 6ஆம் தேதியே மொாிஷியஸ் நாட்டிற்கு தப்பிச் சென்றதாக தகவல்கள் வெளியாகின. இதற்கிடையில் காவல்துறையினர் இன்று அவரது தந்தை முகமது ஷபியை கைது செய்தனர்.
முகம்மது ஷபியின் அண்ணன் மற்றும் தம்பிகள் 6 பேரும் மருத்துவராக பணியாற்றி வருகின்றனா். இதனால் தனது மகனையும் மருத்துவராக்க முகம்மது ஷபி முயற்சித்துள்ளாா். இதனால் அவருக்கு மருத்துவ சீட் கிடைக்க தவறான பாதையை தோ்ந்தெடுத்ததாக கூறப்படுகிறது.
கைதுசெய்யப்பட்ட முகமது ஷபியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில், தப்பியோடிய முகமது இா்பான் எங்கு உள்ளார்? அவருக்கு உதவியது யார்? நீட் தோ்வு மையத்துக்கும் இந்த ஆள்மாறாட்ட புகாருக்கும் இடையே தொடா்பு ஏதேனும் உள்ளதா? என்றெல்லாம் பல்வேறு கோணத்தில் போலீசாா் விசாரணை நடத்தவுள்ளனர். நீட் தோ்வு ஆள்மாறாட்ட புகாாில் தொடர்ச்சியாக மாணவா்கள் சிக்கும் விவகாரம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:
நீட் தேர்வு ஆள்மாறாட்டம் - 3 மருத்துவக் கல்லூரி முதல்வர்களிடம் விசாரணை