ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியிலிருந்து பேப்பர் லோடு ஏற்றிக்கொண்டு கேரள மாநிலம் கொச்சின் நோக்கி லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. அந்த வாகனம் அவிநாசி அருகே சேலம் - கோவை ஆறுவழிச் சாலையில் வரும்போது, பெருமாநல்லூரிலிருந்து அவிநாசி நோக்கி வேகமாக வந்துகொண்டிருந்த இருசக்கர வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து லாரியின் பின்பக்கம் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம்செய்த இளைஞர்கள் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து நடந்த இடத்தில் லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடினார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருமுருகன் பூண்டி காவல் துறையினர் இறந்தவர்களின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு, போக்குவரத்தை சீர் செய்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து திருமுருகன்பூண்டி காவல் துறையினர் நடத்திய விசாரணையில், அவிநாசி அருகே உமைய செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த ரங்கசாமி மகன் முரளி (20), பூச்சந்திரன் மகன் தங்கதுரை (23), தண்டபானி மகன் சுரேஷ்குமார் (23) ஆகிய மூவரும் இருசக்கர வாகனத்தில் பெருமாநல்லூரிலிருந்து அவிநாசி நோக்கி அதிவேகமாக வந்தனர்.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் நிலை தடுமாறி லாரியின் பின்பக்கம் மோதி விபத்துக்குள்ளானதில் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கியும் அடித்தும் மூன்று இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.
இதையும் படிங்க: ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கடத்தல் - பல கோணங்களில் காவல் துறையினர் விசாரணை!