சேலம் அருகிலுள்ள சேலத்தாம்பட்டி கருப்பனூர் பகுதியில் கடந்த சனிக்கிழமை ஆராய் என்ற மூதாட்டி வயல்காட்டில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தபோது கண்ணன் என்பவர் மூதாட்டியைத் தாக்கியுள்ளார்.
மூதாட்டி தாக்கப்பட்டது குறித்து அறிந்த மகள் சிந்தாமணி உறவினர்களுடன் சென்று கண்ணன் வீட்டாரிடம் தாக்கப்பட்டது குறித்து கேட்டபோது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த கண்ணனின் மாமனார் பழனிச்சாமி சிந்தாமணியை கீழே இருந்த கல்லால் எடுத்து தலையில் அடித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடிய நிலையில் சிந்தாமணி சனிக்கிழமை இரவு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனிடையே சிகிச்சைப் பலனின்றி சிந்தாமணி இன்று உயிரிழந்தார்.
முன்னதாக, சிந்தாமணி கல்லால் தாக்கப்பட்டது குறித்து அவரது உறவினர்கள் கெண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன்பேரில் பதிவுசெய்யப்பட்ட வழக்கு தற்போது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. கெண்டலாம்பட்டி காவல் துறையினர் பழனிச்சாமி உள்ளிட்ட மூன்று பேர் மீது கொலை வழக்குப்பதிந்து கைதுசெய்தனர்.
![three family members arrested for murdering woman slm](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-slm-01-lady-death-script-tn10024_27012020133727_2701f_1580112447_210.jpg)
வயல் காட்டில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட மோதலில் பெண் கல்லால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : ஆட்சியர் அலுவலகத்தில் தீ குளிக்க முயன்ற மூதாட்டி