பொதுமக்கள் தங்களது தேவைக்காக ஆன்லைன் மூலம் கந்துவட்டிக்குப் பணம் வாங்கத் தொடங்குகிறார்கள். இதில் தற்கொலைகளும் நிகழ்கின்றன. இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ஒரு மாதம் ஆய்வு நடத்தி விசாரணை மேற்கொண்டனர். அதில், பெங்களூருவில் செயல்படும் கிண்டல் டெக்னாலஜி என்ற நிறுவனம் நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களை வேலைக்கு வைத்து செயலியைச் செயல்படுத்திவருவது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து பெங்களூரு விரைந்து இந்நிறுவனத்தை நடத்திவந்த பெங்களூருவைச் சேர்ந்த பிரமோதா, பவான் ஆகிய இருவரையும் மத்திய குற்றப்பிரிவு காவல் துறை கைதுசெய்தது. ரூபி லோன் என்ற செயலியை உருவாக்கி நிறுவனத்திற்குப் பின்புலமாகச் செயல்பட்ட சீன நாட்டைச் சேர்ந்த ஜியா யமாவ் (38), யுவான் லூன் (28) ஆகிய இருவரையும் கைதுசெய்தனர்.
விசாரணையில் பல திடுக்கிடும் தவல்கள் வெளியாகின. இவர்கள் எல்லோருக்கும் மூளையாக இருந்து பெங்களூருவில் உள்ள அழைப்புதவி மையம் மற்றும் அதன் இயக்கங்கள் அனைத்தையுமே சீன நாட்டிலிருந்து கட்டுப்படுத்துவது கண்காணிப்பது ஹாங்க் என்ற நபர்தான் எனத் தெரியவந்துள்ளது.
இந்த இயக்கங்கள் அனைத்துமே டிங் டாங் என்ற ஒரு செயலி மூலமாக ஹாங்க் தினமும் கண்காணித்துவருவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தச் செயலிகளைப் பயன்படுத்த தேவையான தொலைத் தொடர்புகள் குறித்த விசாரணையை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் தீவிரப்படுத்தினர். லோன் செயலிகளில் பயன்படுத்தப்படும் செல்போன் எண்களை ஆய்வுசெய்ததில் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திடமிருந்து மட்டும் சிம் கார்டுகள் லோன் செயலிகளில் பயன்படுத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.
சென்னை மற்றும் பெங்களூருவில் உள்ள கார்ப்பரேட் நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு ஆக மொத்தமாக சிம் கார்டுகள் வாங்கும் முறையில், இந்தக் கும்பல் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனத்திடம் சுமார் ஆயிரத்து 600 சிம் கார்டுகளை வாங்கியுள்ளது.
இதற்கு கொடுக்கப்பட்ட ஆவணங்கள் போலியா என விசாரணை செய்ததில், 10-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பெயரில் வாங்கியதாகவும், அதில் ஒவ்வொரு நிறுவனத்திலும் 150-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிவதாக ஆவணங்களைச் சமர்ப்பித்து சிம் கார்டுகளை வாங்கியது தெரியவந்துள்ளது.
உரிய ஆவணங்களை வைத்து மீண்டும் மீண்டும் சிம்கார்டுகள் வாங்கப்பட்டது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. சட்டவிரோதச் செயலுக்காக, சிம்கார்டுகள் பெறப்பட்ட தொலைத் தொடர்பு சேவை நிறுவனத்திடம் விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ஆன்லைன் கடன் மோசடி: சீனாவைச் சேர்ந்தவர் உட்பட 4 பேர் கைது