சென்னை பெரியமேடு பகுதியில் வசித்து வருபவர் ராஜ்குமார் ஜெயின். இவர் சென்னை உயர் நீதிமன்றம் விடுத்த ஏலத்தின் மூலம் சௌகார்பேட்டை மின்ட் தெருவில் உள்ள ஒரு இடத்தை 2018ஆம் ஆண்டு வாங்கியதாகவும், பின்னர் அந்த இடத்தில் குடியிருந்த 12 நபர்களுக்கு ரூபாய் 25 லட்சம் கொடுத்து காலி செய்ய வைத்ததாகவும் தெரிகிறது.
அந்த இடத்தில் கடை நடத்தி வந்த கண்பத் லால் என்பவர் மட்டும் பணத்தை பெற்றுக் கொண்டு, கடையை காலி செய்யாமல் இருந்து வந்துள்ளார். மேலும், அவர் கடையை பூட்டி விட்டுச் சென்றதால், இருவருக்குமிடையே பிரச்னை ஏற்பட்டிருக்கிறது.
இதனிடையே, நீதிமன்றத்தில் ராஜ்குமார் ஜெயின் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், ' வீட்டைக் காலி செய்யும் பிரச்னை தொடர்பாக, சென்னை துறைமுகம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சேகர் பாபு அலுவலகத்தில், கட்டப்பஞ்சாயத்து நடந்ததாகவும், அங்கு தன்னை எம்.எல்.ஏ சேகர்பாபு உட்பட 8 பேர் 1 கோடி ரூபாய் கேட்டு மிரட்டியதாகவும்' தெரிவித்துள்ளார்.
மேலும் தன்னிடம் 35 லட்சம் ரூபாய் மட்டுமே உள்ளதாகக் கூறி அவர்களிடம் தந்துவிட்டுச் சென்றதாகவும், ஆனால் மீதமுள்ள 65 லட்ச ரூபாயை கொடுக்குமாறு தொடர்ந்து மிரட்டி வருகின்றனர் என்றும் ராஜ்குமார் ஜெயின் புகாரில் குறிப்பிட்டுள்ளார். அப்புகாரின் அடிப்படையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் சேகர்பாபு உட்பட 8 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அடித்தார், பாலியல் துன்புறுத்தல், கொலை மிரட்டல்! - நித்யானந்தா மீது ஆசிரம நிர்வாகி பரபரப்பு புகார்!