சேலம் அஸ்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் (எ) ராம்கி (24) கடந்த ஆண்டு மே 5ஆம் தேதியன்று 40,000 மதிப்புள்ள இருசக்கர வாகனத்தை திருடியது மட்டுமல்லாமல் அடுத்த மூன்று தினங்களுக்குள் சேலம் கொண்டலாம்பட்டியலில் உள்ள பட்டர்பிளை பாலத்தில் சென்று கொண்டிருந்த அழகுவேல் என்பவரின் வாகனம், பணம் ஆகியவற்றை திருடிய குற்றத்திற்காக அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மேற்படி வழக்குகளில், பிணையில் வெளியே வந்த ராம்கி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதியன்று தினேஷ்குமார் என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி 15,000 மதிப்புள்ள அலைபேசியை திருடியதாக வீராணம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கிலும் பிணையில் வெளிய வந்த ராம்கி, நேற்று (அக்.17) பள்ளப்பட்டியில் பிரபு என்பவரிடம் கொலை மிரட்டல் விடுத்து 7,000 பணம் பறித்தது மட்டுமல்லாமல் உதவிக்கு வந்த பொது மக்களையும் கொலை மிரட்டல் விடுத்ததாக பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த குற்றத்திற்காக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
மேலும், இதே அஸ்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த முஸ்தபா (எ) முகமது அவுஸ் என்பவரும் தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த குற்றத்திற்காகவும், இதற்கு முன்னர் நடந்த குற்றங்களில் இருந்து பிணையில் வெளியே வந்த முஸ்தபா தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து சின்னதிருப்பதியில் உள்ள பெண்மணியிடம் கொலை மிரட்டல் விடுத்து 4 1/4 சவரன் எடையுள்ள தாலிச் சங்கிலியை பறித்ததோடு உதவிக்கு வந்த பொது மக்களையும் கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், இருவரும் தொடர் கொள்ளை, பொது மக்களின் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதற்காக குற்றம் பதிவான நிலையில் கன்னங்குறிச்சி காவல் ஆய்வாளர் பரிந்துரையின் பெயரில் சேலம் மாநகர காவல் துணை ஆணையர் செந்தில் பரிசீலித்து மேற்படி இருவரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்க நேற்று (அக்.17) ஆணை பிறப்பித்தார். பின்னர் இருவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: 8ஆம் வகுப்பு மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியவர் கைது