தேனி: சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த போக்குவரத்து சிறப்பு சார்பு ஆய்வாளருக்கு ஐந்து ஆண்டு சிறைத் தண்டனை வழங்கி மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தேனி மாவட்டம், கம்பம் போக்குவரத்து காவல் துறையில் சிறப்பு சார்பு ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்தவர் பாவாசிக்கந்தர். கடந்த 2018ஆம் ஆண்டு, இவர் ஒன்பது வயது சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் விசாரணை செய்த வீரபாண்டி காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பாவா சிக்கந்தரை கைதுசெய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
இதுதொடர்பாக வழக்கின் விசாரணை நடைபெற்றுவந்தது. இந்த நிலையில், இவ்வழக்கில் தேனி மகிளா நீதிமன்றத்தில் தீர்ப்பு அளித்தது. அதில் போக்குவரத்து சிறப்பு சார்பு ஆய்வாளராகப் பணிபுரிந்த பாவாசிக்கந்தருக்கு ஐந்து ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி வெங்கடேசன் தீர்ப்பளித்தார்.
மேலும் அபராதத்தைச் செலுத்த தவறினால் கூடுதலாக ஆறு மாத சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும் என தனது தீர்ப்பில் நீதிபதி தெரிவித்தார். இதையடுத்து குற்றவாளியை தகுந்த பாதுகாப்புடன் மதுரை மத்திய சிறையில் அடைப்பதற்காக காவல் துறையினர் அழைத்துச் சென்றனர்.