விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள இந்திரா காலணி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராம்(23). இவர் கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் உள்ள எஸ்டேட்டில் பணி புரிந்தார். இந்நிலையில், இவருக்கும், கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள கருங்கல் பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஒருவருக்கும் முகநூலில் பழக்கம் ஏற்ப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 21ஆம் தேதி பள்ளிக்குச் சென்ற மாணவி வீடு திரும்பததால் பெற்றோர் கருங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, மாணவி பயன்படுத்திய செல்ஃபோன் எண்களை ஆராய்ந்து ஜெயராம் பற்றி தெரிந்துகொண்டனர். பின்னர் ஜெயராமையும், மாணவியையும் கர்நாடக மாநிலம் குடகு எஸ்டேட்டில் பிடித்தனர்.
மாணவியை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் குருந்தன்கோட்டில் உள்ள தனது உறவினர்கள் உதவியுடன் கடத்திச் சென்று ஐந்து நாட்கள் குடும்பம் நடத்தியதாக ஜெயராம் வாக்குமூலம் அளித்தார். இதனையடுத்து, மாணவியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிவைத்த காவல் துறையினர், ஜெயராம் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
சிறையில் இருந்த ஜெயராம், வழக்கில் நிபந்தனை ஜாமினில் வெளிவந்து குருந்தன்கோட்டில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி, கருங்கல் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வந்தார். இந்நிலையில், அந்த மாணவி படிக்கும் பள்ளிக்கு நேற்று தனது நண்பருடன் சென்ற ஜெயராம், மாணவியின் தந்தை இறந்துவிட்டதால் அவரை உடனே தன்னுடன் அனுப்புமாறு ஆசிரியரிடம் கேட்டுள்ளார்.
சந்தேகமடைந்த ஆசிரியர் நீங்கள் யார் எனக் கேட்கவே, ஜெயராம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை ஆசிரியரின் கழுத்தில் வைத்து மிரட்டியுள்ளார். ஆசிரியர் போட்ட கூச்சலால் சக ஊழியர்கள் வருவதைக் கண்ட ஜெயராம் அங்கிருந்து ஓடி தப்ப முயன்றார். அப்போது சாலையில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் அவரை சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்தனர்.
இதுகுறித்து பள்ளி நிர்வாகம் கொடுத்த புகாரின் பேரில் பல்வேறு பிரிவுகளின் கீழ் ஜெயராம் மீது வழக்குப் பதிவு செய்த இரணியல் காவல் துறையினர் மீண்டும் அவரை சிறையில் அடைத்தனர்.