சென்னை என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள சுரானா கார்ப்பரேஷன் நிறுவனத்தில் சட்டவிரோதமாக தங்கம் ஏற்றுமதி, இறக்குமதி செய்தது தொடர்பாக சிபிஐ பறிமுதல் செய்த தங்கத்தில் 103 கிலோ தங்கம் மாயமானது. இதனை சிபிசிஐடி காவல்துறையினர் திருட்டு வழக்காக பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் தங்கம் வைக்கப்பட்டிருந்த லாக்கரில் கள்ளச்சாவி போட்டு தங்கம் திருடப்பட்டுள்ளதாக கண்டுபிடித்தனர். இதனையடுத்து, சிபிசிஐடி எஸ்பி விஜயகுமார் தலைமையிலான அலுவலர்கள் குழு சம்பவ இடத்தில் மூன்று முறை ஆய்வு மேற்கொண்டது. நேற்று முன்தினம் (ஜனவரி 6) சிபிசிஐடி டிஜிபி பிரதிப் வி.பிலீப் நேரில் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து அடுத்தக்கட்ட விசாரணையை எவ்வாறு நகர்த்த வேண்டும் என ஆய்வு மேற்கொண்டார்.
அறிவியல் தொழில்நுட்ப ரீதியில் இந்த வழக்கை விசாரணை மேற்கொள்ள உள்ளதாக அவர் தெரிவித்தார். தொடர்ந்து, சுரானா கார்ப்பரேஷன் நிறுவனத்தில் சிபிசிஐடி எஸ்பி. விஜயகுமார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் அறிவியல் தொழில்நுட்ப நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். லாக்கரில் கள்ளச்சாவி போட்டு எவ்வாறு திருடப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக 72 சாவிகள் பயன்படுத்தப்படும் லாக்கரை எவ்வாறு கள்ளச்சாவி போட்டு தங்கத்தை திருடியிருப்பார்கள் என வரைப்படம் வரைந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 2012ஆம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்ட தங்கம் எந்த ஆண்டு திருடு போனது என்பதை கண்டுபிடிப்பதில் சிபிசிஐடி காவல்துறைக்கு சவாலாக இருந்து வருகிறது.
இதனிடையே இந்த வழக்கை விசாரித்த சிபிஐ அலுவலர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த சிபிசிஐடி காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: அமெரிக்க நாடாளுமன்றத்தில் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்ட ட்ரம்ப் ஆதரவாளர்கள்