ராமேஸ்வரம் கடலோர பாதுகாப்பு குழும காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து நேற்றிரவு (செப்.4) தனுஷ்கோடி கடற்கரைப் பகுதியில் ரோந்து சென்றபோது இலங்கையைச் சேர்ந்த ஒருவர் சட்டவிரோதமாக ஊடுருவி தனுஷ்கோடி கடற்கரையில் முகுந்தராயர் சத்திரம் நோக்கி நடந்து செல்வதைப் பார்த்து அவரைப்பிடித்து விசாரணை செய்தனர்.
அதில் அவர் சிங்கள மொழியில் பேசியதால் சந்தேகமடைந்த காவல் துறையினர் அவரை தனுஷ்கோடி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு கடலோர பாதுகாப்பு பிரிவு காவல் துறையினர் இளைஞரிடம் வந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் இலங்கையின் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பிரதீப் குமார் பண்டாரநாயக்க (30) என தெரியவந்தது.
இவ்விசாரணையின் போது, இலங்கை நண்பர் ஒருவர் ராமேஸ்வரத்தில் உள்ள தனது நண்பர் மூலம் வேலை வாங்கி தருவதாக கூறிய அவர், அதற்காக மன்னார் வந்து படகு மூலம் ராமேஸ்வரத்திற்கு வந்ததாகக்கூறினார்.
ஏன் இங்கு வந்தார் என்பது குறித்து மொழிபெயர்ப்பாளர் மூலம் தனுஷ்கோடி கடலோர பாதுகாப்பு பிரிவு காவல் நிலையத்தில் அலுவலர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இவர் இலங்கையில் காவல் துறையில் பணியாற்றியுள்ளார் என்பதால் மத்திய மாநில உளவுத் துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.