திருநெல்வேலி: நாங்குநேரி அருகே இரண்டு பெண்கள் கொடூர கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக தலைமறைவாக உள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேரை தனிப்படை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.
காதலில் தொடங்கிய கொலை...
நாங்குநேரி அருகே மறுகால் குறிச்சி பகுதியைச் சேர்ந்த நம்பிராஜன் என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த வான்மதியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதில் ஆத்திரமடைந்த வான்மதியின் குடும்பத்தினர், நம்பிராஜனை தனியாக அழைத்து, கடந்த 2019ஆம் ஆண்டு கொடூரமாக வெட்டிக் கொலை செய்தனர்.
மகனை இழந்த தாய் பழிக்குப்பழி...
இதுகுறித்து நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து வான்மதியின் சகோதரர் செல்லப்பாண்டி, அவரது உறவினர்கள் 5 பேரை கைது செய்தனர். மகனை இழந்த தாயும், உறவினர்களும், நம்பிராஜனை கொலை செய்தவர்களுக்குத் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்ற நோக்கத்திலும், ஏக்கத்திலும் கொலை சம்பவத்தில் தொடர்புடைய ஆறுமுகம், சுரேஷ் ஆகிய இருவரை நம்பிராஜன் தரப்பு வெட்டிக்கொலை செய்து பழி தீர்த்தது.
இவ்வழக்கில் நம்பிராஜனின் தாய் சண்முகத்தாய் உள்பட 5 பேரை நாங்குநேரி காவல் துறையினர் கைது செய்த சூழலில், அனைவரும் பிணையில் வெளியே வந்தனர். இத்துடன் அனைத்தும் தீர்ந்தது என்று அனைவரும் நினைத்து கொண்டிருக்க, மறுபுறம் பழிவாங்கும் வெறிகொண்டிருந்தது ஆறுமுகம், வான்மதி குடும்பத்தினர்.
கொலை வெறி அடங்காத வான்மதி?
அந்த வெறியை போக்க, ஆறுமுகம், வான்மதி குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் கொண்ட கும்பல் நேற்று முன்தினம் (செப். 26) பயங்கர ஆயுதங்கள், வெடிகுண்டுகளுடன் நம்பிராஜன் வீட்டிற்குள் நுழைந்தனர். அங்கிருந்த நம்பியின் தாய் சண்முகத்தாயை சரமாரியாக அரிவாளால் வெட்டியும், வெடிகுண்டு வீசி கொலை செய்தனர். உயிரிழந்த பிறகும் வெறி தீராத கும்பல், சண்முகத்தாயின் தலையை துண்டாக எடுத்து 200 கிலோ மீட்டர் தூரத்தில் வீசிவிட்டு சென்றனர்.
ஆனால் அந்த 12 பேர் கும்பல் கொலைவெறி அடங்காமல் திரிந்தது. தொடர்ந்து, பக்கத்து தெருவில் வசித்துவந்த சுப்பையா என்பவரின் மனைவி சாந்தியையும், வீடு புகுந்து வெடிகுண்டு வீசியும் அரிவாளால் சரமாரியாக வெட்டி, கொடூரமாகக் கொன்றது.
நண்பன் தாயையும் விட்டுவைக்கவில்லை...
சம்பந்தமே இல்லாமல் பக்கத்து தெரு பெண்ணை இவர்கள் ஏன் கொலை செய்தார்கள் என்று விசாரித்ததில், காதல் திருமணம் செய்துகொண்ட வான்மதி தரப்பைச் சேர்ந்த ஆறுமுகம், சுரேஷ் கொலை செய்யப்பட்ட வழக்கில், சுப்பையாவின் மகன் இசக்கிப்பாண்டி கைது செய்யப்பட்டுள்ளார்.
வான்மதி குடும்பத்தினரால் கொலை செய்யப்பட்ட நம்பிராஜனும், இசக்கிப்பாண்டியனும் நெருங்கிய நண்பர்கள். எனவேதான் இசக்கிப்பாண்டிக்கு குறி வைத்த கும்பல், அவர் வீட்டில் இல்லாததால் அவரது தாய் சாந்தியை படுகொலை செய்தது தெரியவந்தது.
பட்டப்பகலில் வீடு புகுந்து இரண்டு பெண்களை கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் மறுகால்குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினார்.
களத்தில் எஸ்.பி. மணிவண்ணன்...
காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவின் பேரில், வழக்குப்பதிவு செய்யப்பட்டு நாங்குநேரி துணை காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீலிஸா தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடிவருகின்றனர். பழிதீர்க்கும் படலமாக அடுத்தடுத்து நடைபெறும் சம்பவம் என்பதால், இந்த வழக்கில் குற்றவாளிகளாகக் கருதப்படும் வான்மதி, ஆறுமுகம் குடும்பத்தைச் சேர்ந்தவர்களிடம் விசாரணை நடத்துவதற்காக நேற்று (செப். 27) தனிப்படை காவல் துறையினர் அவர்களின் வீட்டிற்குச் சென்றனர்.
திருமணத்திற்கு மீறிய உறவை தட்டிக்கேட்ட பெண் கொலை: இருவர் கைது!
ஆனால் காவல் துறையினர் வருவதை அறிந்த அவர்கள் வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாகிவிட்டனர். மேலும், காவல் துறை கண்டுபிடித்துவிடக்கூடாது என்பதற்காக, அனைவரது கைப்பேசிகளும் அனைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே அண்டை மாவட்டங்களில் அவர்களின் உறவினர்கள் யாராவது இருக்கிறார்களா அல்லது வேறு எங்காவது பதுங்கி இருக்கிறார்களா? என்பது குறித்து தனிப்படை காவல் துறையினர் அனைத்து திசைகளிலும் தேடி வருகின்றனர்.
மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்குத் தனிப்படை காவல் துறையினர் தனித்தனியாக பிரிந்து, தலைமறைவாகவுள்ள வான்மதி, ஆறுமுகம் குடும்பத்தினரை தேடிவருகின்றனர். இதற்கிடையில், இந்தச் சம்பவம் தொடர்பாக வேறெந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் இருப்பதற்காக, நேற்று முன்தினம் (செப். 26) கொலை செய்யப்பட்ட சண்முகத்தாய், சாந்தியின் வீட்டுக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அந்தத் தெரு வழியாக செல்லும் சந்தேகிக்கப்படும் நபர்கள் தீவிர விசாரணைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். காதல் திருமணத்தில் தொடங்கிய பகை இதுவரை ஐந்து உயிர்களை காவு வாங்கிய பிறகும் முடிவடையாமல் இருப்பது மறுகால்குறிச்சி பகுதி மக்களிடையே ஒருவித பீதியை ஏற்படுத்தியுள்ளது.