திண்டுக்கல் பாரதிபுரத்தில் உள்ள கே.எம்.எஸ் நகரில் வசித்து வந்தவர் செல்வராஜ் (40). இவர் நேற்றிரவு (நவ.1) வீட்டில் உறங்கிகொண்டிருந்த போது, அவரை 9 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டினர். இதனைத் தடுக்க முயன்ற அவரது தாயார் பாப்பாத்தியையும் (57) தலையில் வெட்டிவிட்டு கொலையாளிகள் தப்பிச் சென்றனர். முகம் சிதைந்து காணப்பட்ட செல்வராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திண்டுக்கல் தெற்கு நகர் காவல்துறையினர், பாப்பாத்தியை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், செல்வராஜ் பழி வாங்கும் விதமாக மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. கொலையாளிகளை பிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: திமுக பிரமுகர் உயிரிழப்பு : மருத்துவக் கல்லூரி சாலையில் மறியலில் ஈடுபட்ட திமுகவினர்