சென்னை: பெற்றோரிடம் இருந்து சொத்தைப் பெற்றுக்கொண்டு அவர்களை சரிவர கவனிக்காத மகன் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
தங்கசாலை வள்ளலார் நகர் பேருந்து நிலையம் அருகேயுள்ள போர்த்துக்கீசியர் ஆலயத் தெருவைச் சேர்ந்த குழாய் பணியாளர் குமாரசாமி(74) - மாலா(65) தம்பதிக்கு, 3 பெண் பிள்ளைகளும், ஒரு மகனும் உள்ளனர். 2009ஆம் ஆண்டில் இவரது மகன் சொத்துக்கள் மீது கடன் பெற்று வியாபாரம் செய்வதாகக் கூறி, தந்தைக்கு மதுபோதையேற்றி பத்திரத்தில் கையெழுத்து வாங்கியுள்ளார்.
தனது சொத்திலிருந்து சுமார் 40,000 ரூபாய் வாடகை பெறும் மகன் தீனதயாளன், தங்களுக்கு 7 ஆண்டுகளாக சரியாக உணவளிக்கவில்லை என்று அந்த பெற்றோர்கள் கண்ணீருடன் ஆர்டிஓ அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தார். முதல் மூன்று மாதம் மட்டும் ரூ.2,000 ரூபாய் தந்த மகன், தன்னை அடித்து வீட்டில் சிறை வைத்து தொந்தரவு செய்ததாக ஏழுகிணறு காவல் நிலையத்திலும் தந்தை குமாரசாமி புகார் அளித்துள்ளார்.
தந்தை குமாரசாமி, தாய் மாலா, மகள் பத்ம பிரியா ஆகியோரின் உதவியோடு, தனது சொத்தை திருப்பி கேட்டு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2.12. 2019 அன்றும் ஒரு புகார் அளித்துள்ளார். இதனையடுத்து தண்டையார்பேட்டை ஆர்டிஓ அலுவலகத்திற்குப் புகார் மனு விசாரணைக்கு அனுப்பப்பட்டது. தொடர்ந்து, தற்போது ஆர்டிஓ அலுவலகத்திற்குச் சென்று பெற்றோர் புகார் மனு அளித்துள்ளனர்.