தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரம குளத்துவாய்பட்டியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ்(73).
இவர் நாட்டு சித்த வைத்தியம் மற்றும் விவசாயம் பார்த்து வந்தார். இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி ராஜாகனி, இவருக்கு சரண்யா என்ற மகள் உள்ளார். கணவன், மனைவிக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையால் 20 ஆண்டுகாலமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
அவரது 2ஆவது மனைவி ஆனந்தி. இவருக்கு புருஷோத்தமன் (23) என்ற மகன் உள்ளார். டிப்ளமோ படித்த புருஷோத்தமன் பாதியில் படிப்பை நிறுத்திவிட்டு வீட்டில் இருந்துள்ளார்.
அவருக்கு லேசான மனநிலை பாதிக்கப்பட்ட காரணத்தினால் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதற்காக தினமும் மாத்திரையும் சாப்பிட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக புருஷோத்தமன் மாத்திரை சாப்பிடுவதில்லை எனத் தெரிகிறது. இதனால், மோகன்ராஜ் தனது மகனை மாத்திரை சாப்பிட வலியுறுத்திள்ளார்.
புருஷோத்தமன் மாத்திரை சாப்பிட மறுத்துள்ளார். இதனால் தந்தை, மகன் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், வீட்டில் இருந்த உலக்கையை எடுத்து புருஷோத்தமன் தனது தந்தையை தாக்கியுள்ளார்.
இதில், மோகன்ராஜ் முகத்திலும், நெற்றியிலும் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்ததோடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மோகன்ராஜின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து புருஷோத்தமனை கைது செய்த காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இதையும் படிங்க: பிரபல பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன் காலமானார்