திருவள்ளூர் மாவட்டத்தை அடுத்த பாடியநல்லூர் அருகே உள்ள காந்தி நகர் சர்ச் தெருவில் முனியாண்டி என்பவர் குடும்பத்துடன் வசித்துவருகிறர். இவருக்கு பிரசாந்த் என்கிற மகன் உள்ளார். அவர் ஞாயிற்றுகிழமை விடுமுறை என்பதால் இயேசு நாதர் தேவாலயம் முன்பு உள்ள விளையாட்டு திடலில் வாலிபால் விளையாடிக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு ஆறு பேர் கொண்ட கும்பல் இருசக்கர வாகனத்தில் வந்து, விளையாடிக் கொண்டிருந்த பிரசாந்தை அரிவாளால் வெட்ட முயன்றனர். அப்போது உடன் விளையாடிக் கொண்டிருந்த அனைவரும் அங்கிருந்து குடியிருப்பு பகுதிக்கு ஓடியதால் அந்த கும்பலிடம் தனியாக மாட்டிக்கொண்ட பிரசாந்தை அரிவாளைக் கொண்டு கொடூரமாக வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலையடுத்து, விரைந்து வந்த சோழவரம் காவல் துறையினர் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதையடுத்து, பிரசாந்தை கொலை செய்ததன் காரணம் முன்விரோதமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
மேலும், அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு குற்றவாளிகளை காவல் துறையினர் தேடி வருகின்றனர். ஏற்கனவே சோலையம்மன் நகர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் கடந்த 17ஆ ம்தேதி மாதவரத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.