சென்னை: ஆவடி அருகே பல்வேறு இடங்களில் டாஸ்மாக் மதுபான பார்களில் டேங்க் பேக்டரி காவல் துறையினர் அதிரடி சோதனை நடத்தி சுமார் 500-க்கும் மேற்பட்ட மதுபான பாட்டில்களைப் பறிமுதல்செய்தனர்.
ஆவடி அருகே புதிய கண்ணியம்மன் நகர், அண்ணா நகர், கன்னடபாளையம் உள்ளிட்ட பல்வேறு மதுபான பார்களில் சட்டவிரோதமாக அதிகாலை முதலே மது விற்பனை செய்துவருவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் டேங்க் பேக்டரி காவல் துறை ஆய்வாளர் நடராஜன் தலைமையில் புதிய கண்ணியம்மன் நகர், அண்ணா நகர், வெள்ளானூர், கன்னடபாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிகாலை 5 மணிமுதல் காலை 7 மணிவரை காவல் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
இச்சோதனையில் சட்டவிரோதமாக விற்பனை செய்துவந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட மதுபான பாட்டில்களை காவல் துறையினர் பறிமுதல்செய்தனர். இதனைத்தொடர்ந்து அண்ணாநகரில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்துவந்த ஒருவரை காவல் துறையினர் கைதுசெய்து தீவிரமாக விசாரணை நடத்திவருகின்றனர்.
மேலும் டாஸ்மாக் கடை ஊழியர்கள் ஒரு பாட்டிலுக்கு பத்து ரூபாய் அதிக விலை வைத்து விற்பனை செய்துவரும் நிலையில் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறக்கூடிய விற்பனையில் நாளொன்றுக்கு 40,000 முதல் 50,000 ரூபாய் வரை ஒவ்வொரு நபரும் சம்பாதிப்பதாக மதுப்பிரியர்கள் குற்றஞ்சாட்டிவருகின்றனர்.
இது போதாதென்று இரவு பத்து மணியிலிருந்து மறுநாள் 12 மணி வரை டாஸ்மாக் கடைகளில் உள்ள அனுமதி இல்லாத பார்களால் விற்கப்படும் மதுபாட்டிலுக்கு 50 முதல் 70 ரூபாய் வரை அதிக விலை கொடுத்து வாங்கி குடிப்பதாகவும் மதுப்பிரியர்கள் தெரிவிக்கின்றனர். .
தற்பொழுது நடைபெறும் ஊரடங்கு நேரத்தில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பார்களுக்கு தடைவிதித்திருந்த போதிலும் சில கடைகளில் அரசுக்குத் தெரியாமல் ஆவடி, திருநின்றவூர், பட்டாபிராம், பூவிருந்தவல்லி, அம்பத்தூர், பாடி, செங்குன்றம் போன்ற பகுதிகளில் அரசு அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக பார் நடைபெற்றுவருகிறது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தாம்பரம் செல்போன் கடை திருட்டு: வெளியான சிசிடிவி காட்சிகள்!