சென்னை சௌக்கார்பேட்டையில் மின்னணு உபகரணங்கள் விற்பனை செய்யப்படும் மிகப்பெரிய சந்தை செயல்பட்டு வருகிறது. சௌக்கார்பேட்டை கோவிந்தப்பன் தெருவில் இயங்கும் நூற்றுக்கணக்கான மொத்த வியாபார கடைகளில் தமிழ்நாடு எலக்ட்ரிகல்ஸ் பேலஸ் என்ற கடையும் செயல்பட்டு வருகிறது.
பல முன்னணி நிறுவனங்களின் மின்னணு பொருட்களை விற்பனை செய்து வரும் இந்த கடையில் ஆர்பிட் நிறுவனத்தின் பெயரிலான போலி வயர்களை விற்று வந்துள்ளதாக ஆர்பிட் நிறுவனத்தின் மண்டல மேலாளர் ரவீந்திர குமாருக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக ஆர்பிட் நிறுவனத்தின் நிர்வாகிகள் சிலர் போலி வயர் விற்பதை கண்டுபிடிப்பதற்காக கோவிந்தப்பன் தெருவில் உள்ள தமிழ்நாடு எலக்ட்ரிகல்ஸ் பேலஸ் கடைக்கு சென்று வாடிக்கையாளர்கள் போல நடித்து வயர்களை வாங்கி வீடியோ எடுத்தனர்.
பிறகு யானைகவுனி காவல் நிலையத்தில் மண்டல மேலாளர் பிரவின் குமார் புகாரளித்தார். இது தொடர்பாக விசாரணை நடத்திய காவல் துறையினர் தமிழ்நாடு எலக்ட்ரிகல்ஸ் பேலஸ் கடையில் சோதனை நடத்தியதில் சுமார் ரூ. 1.10 லட்சம் மதிப்பிலான போலி ஆர்பிட் நிறுவன வயர்களை பறிமுதல் செய்து, அந்த விற்பனை நிறுவனத்தின் நிர்வாகியான குந்தன் பிரதாப் சிங் என்பவரை கைது செய்தனர்.
ஆர்பிட் நிறுவனத்தின் உபகரணங்கள் போன்று போலியாக உபகரணங்களை தயாரித்து, சந்தையில் நீண்ட காலமாக விற்று வந்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பிரபல நிறுவனங்களின் பொருட்களை போல போலியாக தயாரித்து சப்ளை செய்யும் கும்பல் யார்? எங்கிருந்து தயாரித்து கொண்டு வரப்படுகிறது? எனவும் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. வேறொரு மாநிலத்தில் இருந்து போலி வயர்கள் வருவதாக இந்த மோசடியில் பலருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களை கைது செய்ய காவலர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இவர்கள் மேலும் பல பிரபல நிறுவனங்களின் உபகரணங்களையும் விற்பனை செய்யும் ஏஜெண்டுகள் என்பதால், அவையும் போலியானதா என சந்தேகம் எழுந்துள்ளதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர். வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்பட்டு தரமற்ற போலி மின்னணு உபகரணங்களை வாங்கி பயன்படுத்துவதால் அவ்வப்போது மின் கசிவு மூலம் தீவிபத்து ஏற்படுகிறது எனவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.
எனவே, இந்த வழக்கை தீவிரமாக விசாரிக்க சிபிசிஐடியின் அறிவுசார் சொத்துரிமை புலனாய்வு பிரிவுக்கு மாற்றுவது குறித்து காவல் துறையினர் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சிறுமியை திருமணம் செய்ய அழைத்தச் சென்றவர் போக்சோவில் கைது