தேனி மாவட்டம் கம்பம் பத்திரப்பதிவு அலுவலகம் அருகே சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் சென்ற பக்தர்களின் வாகனம் விபத்துக்குள்ளானது. காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் கார்த்திக், வாகனங்களுக்குக் கட்டமைப்பு பணி செய்து வரும் இவர் தனது மகள் வர்ஷா(8) மற்றும் நண்பர்கள் பூபாலன், பழனி உட்படச் சிலருடன் சபரிமலைக்குச் செல்ல ஆன்லைனில் பதிவு செய்து, நேற்று மாலை ஒரு காரில் புறப்பட்டுள்ளனர். காரை வேலூரைச் சேர்ந்த சீனிவாசன் ஓட்டி வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று அதிகாலை இவர்கள் வந்த கார் தேனி மாவட்டம் கம்பம் பத்திரப்பதிவு அலுவலகம் அருகே வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் அருகிலிருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தந்தையின் மடியில் அமர்ந்து வந்த சிறுமி வர்ஷா பலத்த காயமடைந்து சம்பவ இடத்தில் உயிரிழந்தார். வண்டியில் வந்த மற்றவர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கம்பம் தெற்கு காவல் துறையினர், சிறுமியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு சோதனைக்காகக் கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் டிரைவர் சீனிவாசன் தூக்கக் கலக்கத்தில் வண்டியை ஓட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், ஓட்டுநரை கைது செய்த கம்பம் தெற்கு காவல் துறையினர் இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க... சுவர் இடிந்து விழுந்ததில் பாட்டி, மகள், பேத்தி உயிரிழப்பு!