திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் பிரபல நகைக்கடை இரண்டு தளங்களில் இயங்கிவருகிறது. பிரமாண்டமான இந்த நகைக்கடையில் நாள்தோறும் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பில் வர்த்தகம் நடைபெறும். இதனால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் இங்கு இருப்பு வைக்கப்பட்டிருக்கும்.
நேற்றிரவு கடை ஊழியர்கள் வழக்கம் போல் கடையை மூடிவிட்டுச் சென்றனர். இரவு நேர காவலாளிகள் மட்டுமே பணியில் இருந்தனர். இந்நிலையில், இன்று காலை கடையை திறப்பதற்காக ஊழியர்கள் வந்தனர். கடையின் ஷட்டரை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது தரை தளத்தில் உள்ள ஷோகேஸ்கள் கலைந்து அலங்கோலமாக காட்சியளித்தது. அவற்றில் காட்சிபடுத்தப்பட்டிருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் மாயமாகியிருந்தது கண்டு ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர், உள்ளே சென்று பார்த்தபோது கடையின் சுவற்றில் துளையிட்டு உள்ளே புகுந்த கொள்ளையர்கள் நகைகளை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. தகவலறிந்த கோட்டை குற்றப்பிரிவு காவல் துறையினர் சம்பவம் நடைபெற்ற இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். பின் கடைகளில் பதிவாகியிருந்த கைரேகைளை சேகரித்த காவல் துறையினர், இரவு நேர காவலாளிகள், ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில் கொள்ளை போன தங்க நகைகளின் மதிப்பு ரூ.50 கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கடையின் முதல் தளத்தில் உள்ள நகைகள் எதுவும் மாயமாகியுள்ளதா என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் கடையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவியை ஆராய்ந்தபோது அதில் முகமூடி அணிந்த இரண்டு கொள்ளையர்கள் கடைக்குள் இருப்பது போன்ற காட்சிகள் பதிவாகியிருந்தது. தற்போது இந்த காட்சியை வைத்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் குறித்து காவல் துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.
திருச்சியில் மக்கள் நடமாட்டமும், சிசிடிவி கேமராக்கள் நிறைந்த சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் அமைந்துள்ள நகைக்கடையில் கொள்ளை நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.