நீலாங்கரை வெட்டுவாங்கேணி பகுதியைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மகன் ராம்குமார் (24). திருவல்லிக்கேணியில் ஏசி மெக்கானிக் வேலை செய்து வந்துள்ளார். கடந்த 15ஆம் தேதி ராம்குமார் குடிபோதையில் நடுக்குப்பத்தைச் சேர்ந்த பிரேம்குமார் (25) என்பவரை பாட்டிலால் தாக்கியுள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஐஸ் அவுஸ் காவல்துறையினர் அவரைத் தேடிவந்தனர்.
இந்நிலையில், கடந்த 19 ஆம் தேதி நடேசன் சாலையில் உள்ள டீக்கடையில் ராம்குமார் நின்று கொண்டிருந்தபோது அங்கு ஆட்டோவில் வந்த 10க்கும் மேற்பட்ட கும்பல் அவரை சரமாரியாக கத்தியால் வெட்டியுள்ளனர். இதில் ராம்குமார் நிகழ்விடத்திலேயே மயங்கியுள்ளார். பின்னர் அக்கும்பல் அவரை ஆட்டோவில் கடத்திச் சென்றது. இது தொடர்பாக ராம்குமாரின் தந்தை குருமூர்த்தி கொடுத்தப் புகாரின் பேரில், ஐஸ் அவுஸ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து திருவல்லிக்கேணியைச் சேர்ந்த அப்பு, ஜெகன், ஆட்டோ டிரைவர் அருண் ஆகியோரை கைது செய்து விசாரித்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நடுக்குப்பத்தைச் சேர்ந்த பிரேம்குமார், சிவமணி, அப்துல் ரஹீம், அஸ்மத், சுபான், கார்த்திக், ரஞ்சித், வினோத் ஆகியோர் ராம்குமாரை கடுமையாகத் தாக்கிவிட்டு பின்னர் ஆட்டோவில் கடத்திச்சென்று கொலை செய்தது தெரியவந்தது.
மேலும், அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், கோவளம் கல்லுக்குட்டை பகுதியில் ராம்குமார் உடலை காவலர்கள் கண்டெடுத்தனர். இக்கொலையில் தொடர்புடைய, பிரேம் குமார் உள்ளிட்ட 8 பேரை ஐஸ் அவுஸ் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட ராம்குமார் மீது ஐஸ் அவுஸ் காவல் நிலையத்தில் கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சொத்துத் தகராறு: தந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்த மகன்