நெடுங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் ரவுடி சூர்யா (32). இவர் மீது ஏழு கொலை வழக்கு உள்பட 59க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த சில மாதங்களாகவே இவர், காவல்துறையிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்தார்.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஓட்டேரியில், பாஜக சார்பில் பொதுமக்களுக்கு மோடி கிட், முகக் கவசம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று (ஆகஸ்ட் 30) நடைபெற்றது. இதில் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியில், ரவுடி சூர்யா எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைய உள்ளதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் ஓட்டேரி காவல்துறையினர் நிகழ்விடத்திற்கு விரைந்தனர். இதனையடுத்து அவர்கள் அங்கு வருவதை அறிந்த ரவுடி சூர்யா, அவரது காரை அங்கேயே விட்டுவிட்டு, பாஜக மாநிலச் செயலாளர் கே.டி.ராகவன் காரில் ஏறி தப்பிச்சென்றார். பின்னர் அங்கு பதுங்கி இருந்த ரவுடி சூர்யாவின் கூட்டாளிகள் ஜோசப் பெஞ்சமின் (20), சரத்குமார் (29), ருக்மாங்கதன் (20), யவாகித்தன் (20), பிரபாகரன் (35) ஆகியோரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், தலைமறைவாக உள்ள ரவுடி சூர்யாவை தேடும் பணியிலும் காவலர்கள் தீவிரம் காட்டியுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக பிரபல ரவுடி கல்வெட்டு ரவி பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஏடிஎம்மில் திருட முயற்சி: ஒலிபெருக்கியில் அலுவலர்கள் எச்சரித்ததால் தப்பியோட்டம்!