சென்னை செளகார் பேட்டையில் கடந்த 11ஆம் தேதி தலில் சந்த், அவரது மனைவி புஷ்பா பாய், மகன் ஷீத்தல் ஆகியோர் துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக ஷீத்தலின் மனைவி ஜெயமாலா, அவரது சகோதர்களான கைலாஷ், விலாஷ் மற்றும் இவர்களது கூட்டாளிகள் விஜய் உத்தம், ரவீந்தரநாத்கர், ராஜீவ் ஷிண்டே ஆகியோரை புனே, டெல்லியில் காவல் துறையினர் கைது செய்தனர்.
பின்னர் காவல் துறையினர் கைலாஷ், ரவீந்திரநாத்கர், விஜய் உத்தம் ஆகியோரை 10 நாள்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்திய போது, சுட பயன்படுத்திய துப்பாக்கி ஓய்வு பெற்ற ராணுவ வீரரான ஜெய்ப்பூரை சேர்ந்த ராஜீவ் துபே (58) என்பவரது துப்பாக்கி என தெரியவந்தது. இதனால் ராணுவ வீரரான ராஜீவ் துபேவை சென்னை அழைத்து வந்து விசாரணை செய்துள்ளனர்.
விசாரணையின் போது ராஜீவ் துபே ஜெய்ப்பூரில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருவதாகவும், அந்த ஹோட்டலுக்கு அடிக்கடி கைலாஷ் வந்து தங்கும் போது பழக்கம் ஏற்பட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் காரை கைலாஷிக்கு விற்க முடிவு செய்து கொடுத்து அனுப்பியதாகவும், அப்போது மறந்து காரில் தனது துப்பாக்கியை விட்டதாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், இதனை பயன்படுத்தி மூன்று பேரையும் சுட்டு கொலை செய்ததாக தெரிவித்திருந்தார். அவர் அளித்த வாக்குமூலம் முன்னுக்குபின் முரணாக இருந்துள்ளது. இச்சம்பவத்துக்கு ராஜீவ் கார் மற்றும் துப்பாக்கியை வழங்கியது நிரூபணமாகியதால் காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் குறிப்பாக ஓய்வு பெற்ற ராணுவ அலுவலரை கைது செய்ய வேண்டுமென்றால் பல்வேறு விதிமுறைகள் உள்ளதாகவும், அந்த வேலைகளில் ஈடுபட்டு வருவதாகவும் காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: செளகார்பேட்டை கொலை வழக்கு - மூன்று பேர் கைது!