புதுவையில் ஊரடங்கு காரணமாக அத்தியாவசியப் பொருள்களின் கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. மதுபானக்கடை திறக்காததால் குடிமகன்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். பல மடங்கு விலை கொடுத்து கூட மதுபானங்களை வாங்க தயாராக உள்ளனர். இதனால் திருட்டுதனமாக மதுபானங்கள் அதிக விலைக்கு விற்பனையாகி வருகின்றன.
இதனிடையே மதுபான குடோன்களை உடைத்து மதுபான பாட்டில்களை கொள்ளையடிக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. இதனிடையே மதுபானக் கடையில் மதுபானங்களை ஒரு இளைஞர் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றிரவு பெரியக்கடை காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியில் புதுவை ரங்கப்பிள்ளை வீதி - கேன்டீன் வீதி சந்திப்பில் உள்ள பூட்டிய மதுபானக்கடையின் அருகே இளைஞர் ஒருவர் மது அருந்திக்கொண்டிருந்ததை கண்டனர். காவல் துறையினரைக் கண்டதும அந்த இளைஞர் ஓட்டம் பிடித்துள்ளார்.
அவரை விரட்டி பிடித்த காவலர்கள் அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் மணக்குள விநாயகர் கோவில் அருகே உள்ள நடைபாதையில் வசிக்கும் செல்வம் என்பவரின் மகன் விஜய் (20) என்பது தெரியவந்தது. மதுபோதைக்கு அடிமையான இவர், வெளியில் எங்கும் மதுபானங்கள் கிடைக்காததால் மதுபான கடையில் புகுந்து மதுபானங்களை திருடியாக தெரிவித்துள்ளார்.
இச்சூழலில் இன்று காலை விஜய்யை பெரியக்கடை காவல் துறையினர் மதுக்கடைக்கு அழைத்து வந்து, எந்த வழியாக சென்று மதுபானங்களை திருடினார் என நடித்து காட்ட கூறினர். அதன்படி விஜய் மதுக்கடையின் சுவர் மீது ஏறி தகரதடுப்புகளை அகற்றி உள்ளே சென்று நடித்து காட்டியுள்ளனர். இதனையடுத்து விஜய்யை காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து 11 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.