சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களின் செல்ஃபோன்கள் திருட்டு போகும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வந்தன. இந்நிலையில் அங்கு பணியாற்றும் அரசு மருத்துவரான ஐஸ்வர்யாவின் விலை உயர்ந்த செல்ஃபோனும் கடந்த டிசம்பர் மாதம் திருட்டு போனது. இதையடுத்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் அவர் புகாரளித்தார்.
அதன்பேரில், மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அதில், செல்ஃபோன்கள் திருடப்படும் காட்சி பதிவாகியிருந்தது. அதனை வைத்து கொள்ளையர்களை காவலர்கள் தேடி வந்த நிலையில், புளியந்தோப்பைச் சேர்ந்த சத்தியராஜ், கொடுங்கையூரைச் சேர்ந்த ஜாகிர் உசேன் ஆகியோரை, சைபர் கிரைம் உதவியுடன் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விசாரணையில், 2 பேரிடமிருந்தும் 42 திருட்டு செல்ஃபோன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவையனைத்தும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை ஆகியவற்றுக்கு வந்த நோயாளிகள், உடன் வருபவர்கள், மருத்துவர்கள் ஆகியோரிடம் திருடப்பட்டதை பிடிபட்ட இருவரும் ஒப்புக்கொண்டனர். அவர்களிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த கும்பல்! - சுற்றி வளைத்த காவல்துறை!