தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பூலோகபாண்டின் என்பவர், மணல் கொள்ளை குறித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில்,
"ஸ்ரீவைகுண்டம் வட்டம், கருங்குளம் அருகே சட்டவிரோதமாக சிலர் மணல் திருட்டில் ஈடுபடுகிறார்கள். இவை விவசாய நிலத்திற்கு பாசனத்திற்காக உள்ள ஆலங்குளம் குளத்தில் இருந்து அள்ளப்படுகிறது. உயர் நீதிமன்றக் கிளை சட்டவிரோத மணல் கொள்ளையைத் தடுப்பதற்கு ஏற்கெனவே மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
உயர் நீதிமன்ற உத்தரவை மீறி ஏரி, குளங்களில் சட்டவிரோதமாக மணல் கொள்ளை நடைபெறுகிறது. எனவே, தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் பஞ்சாயத்தில் சட்டவிரோதமாக நடைபெறும் மணல் கொள்ளையைத் தடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சட்ட விரோதமாக மணல் கொள்ளை நடைபெறுகிறது என மனுதாரர் கூறிய இடத்தை, அலுவலர்கள் ஆய்வு செய்து, அரசு அனுமதியுடன் மணல் அள்ளப்படுகிறதா அல்லது சட்ட விரோதமாக மணல் கொள்ளை நடக்கிறதா என ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.