கோயம்புத்தூர்: சிறுமுகை பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் யானையால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
சிறுமுகை அடுத்த லிங்காபுரம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கத்தின் முன்னாள் செயலாளர் சம்பத்குமார். ஓடந்துறையில் உள்ள தோட்டத்திலிருந்து லிங்கபுரத்தில் உள்ள தனது வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது வனத்துறை சோதனைச் சாவடி அருகே வந்தபோது, வனப்பகுதியிலிருந்து வெளியேறிய பெண் காட்டு யானை ஒன்று அவரை தாக்கியதால் வாகனத்திலிருந்து கீழே விழுந்த சம்பத்குமார் படுகாயமடைந்தார். இதனையடுத்து அவரின் அலறல் சத்தத்தைக் கேட்டு அங்கு வந்த பொதுமக்கள், சத்தம் எழுப்பி யானையை காட்டுக்குள் விரட்டினர்.
தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த சிறுமுகை வனத்துறையினர் சம்பத்குமாரை மீட்டு 108 அவசர ஊர்தி வாகனம் மூலம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் சம்பத்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும், மேட்டுப்பாளையம் சட்டப்பேரவை உறுப்பினர் ஒ.கே. சின்னராஜ், சிறுமுகை பேரூராட்சி செயலாளர் ரவிக்குமார் ஆகியோர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி அவர் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். உயிரிழந்த சம்பத்திற்கு சிவப்பிரியா (45) என்ற மனைவியும், நிவாஸ் (24) என்ற மகனும் உள்ளனர்.