கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையைச் சேர்ந்தவர் ஹாஜா பக்ரூதின். இவர் சிங்கப்பூருக்கு பணிக்காக சென்ற போது, அங்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினருடன் தொடர்பு ஏற்பட்டு, கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு சிரியாவிற்கு சென்றதாகக் கூறப்படுகிறது. மேலும், அவர் அங்கு தீவிரவாதப் பயிற்சிகளில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது.
கடந்த 2013 முதல் 2016 வரை ஹாஜா பக்ருதினை தமிழ்நாடு காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். ஆனால், அவரைப்பற்றிய தகவல் ஏதும் கிடைக்காததால், கடந்த 2017 ஆம் ஆண்டு இவ்வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், ஹாஜா பக்ரூதினை தேடப்படும் குற்றவாளியாக தேசிய புலனாய்வு முகமை அறிவித்துள்ளது. இதனையடுத்து, அவரைத் தேடும் பணியில் புலனாய்வுத்துறையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இதுமட்டுமல்லாமல் பன்னாட்டு காவல் அமைப்பான ’இன்டர்போல்’ அலுவலர்களும், ஹாஜா பக்ருதீன் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு சன்மானம் அறிவித்துள்ளது.
இதேபோல், தஞ்சாவூரைச் சேர்ந்த ரகுமான் சாதீக், முகமது அலி ஜின்னா, அப்துல் மஜித், புர்கானுதின், ஹாகுல் ஹமீது, நபீல் ஹாசன் ஆகியோரையும் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்து தேசிய புலனாய்வு முகமை தேடி வருகிறது. இவர்கள் ஆறு பேரும், கடந்த 2019ஆம் ஆண்டு கும்பகோணம் பாமக நிர்வாகி ராமலிங்கம் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள இவர்கள் 7 பேரை பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு, ஒரு லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என தேசிய புலனாய்வு முகமை அறிவித்து ஓராண்டாகியும், இவர்கள் குறித்து இதுவரை எந்த வித துப்பும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மற்றொரு பொள்ளாச்சியா? மதுரையில் பரபரக்கும் பாலியல் குற்றச்சாட்டு - போலீசார் தீவிர விசாரணை