வேலூர் மாவட்டம் சாமரிஷிகுப்பம் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரது மகன் ஹேமந்த் குமார். இவரது தனது பிறந்தநாளை நண்பர்களான அஜித், திலீப் ஆகியோருடன் நேற்றிரவு அங்குள்ள ஏரி பகுதியில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் குடிபோதைமில் வந்த அதேப்பகுதியை சேர்ந்த ராபின், ரீகன் மற்றும் சின்னா ஆகியோர் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுடன் வாக்குவாதம் செய்துள்ளனர்.
வாய்த்தகராறு பின்னர் அது மோதலாக மாறியுள்ளது. அப்போது ஹேமந்த் குமார் மற்றும் அவரது நண்பர்களை ராபின், ரீகன், சின்னா ஆகியோர் கத்தி மற்றும் பிளேடால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அஜித், ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இந்நிகழ்வை தடுக்க வந்த அஜித்தின் சித்தப்பா வேலு என்பவருக்கும் கத்திக்குத்து விழுந்ததில் குடல் சரிந்தது. திலிப்பிற்கு தோள்பட்டையில் கத்திக்குத்து ஏற்பட்டுள்ளது. இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையடுத்து கொலையில் தொடர்புடைய ராபின், ரீகன், சின்னா ஆகிய மூன்று பேரையும் கைது செய்த மேல்பட்டு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த அஜித்தோடு ராபின், ரீகன் இருவருக்கும் சாமுண்டீஸ்வரி கோவில் விவகாரத்தில் முன்விரோதம் இருந்தது தெரியவந்துள்ளது.