எர்ணாகுளம்: கேரள தங்கக் கடத்தல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள சரித், ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் உள்ளிட்டோர் மீது சட்ட விரோத பணப் பரிவர்த்தனை புகாரும் உள்ளது.
இந்தப் புகாரின் அடிப்படையில் இவர்களிடம் விசாரணை நடத்த எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிமன்றம் திங்கள்கிழமை (நவ2) அனுமதி அளித்துள்ளது. இவர்கள் ஏற்கனவே நீதிமன்ற காவலில் சிறையில் உள்ளனர்.
இந்நிலையில் இவர்களுக்கு மூன்று நாள்கள் நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பிரதான குற்றவாளியாக சரீத் சேர்க்கப்பட்டுள்ளார். இரண்டாம் குற்றவாளியாக ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த வழக்கில் 5ஆவது குற்றவாளியாக முதலமைச்சர் பினராயி விஜயன் அரசில் முன்னாள் தலைமை செயலராக பதவி வகித்த எம்.சிவசங்கர் உள்ளார். இவர் மீது அமலாக்கத்துறை அலுவலர்கள் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் இவரை கைது செய்து காவலில் எடுத்து விசாரணை நடத்திவருகின்றனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் சரீத், ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோரிடம் விசாரணை நடத்த வாய்ப்புள்ளது. முன்னாள் ஐ.ஏ.எஸ் அலுவலரான எம்.சிவசங்கரின் கைது, கேரள அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில் அவரிடம் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.
இந்த விவகாரத்தில் மாநில முதலமைச்சர் பினராயி விஜயனுக்கும் நேரடி தொடர்பிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன.
இதையும் படிங்க: கேரள முதலமைச்சரின் நம்பகமான IAS அதிகாரி எம்.சிவசங்கர் வீழ்ந்த கதை!