சென்னை ஆவடி அடுத்த அயப்பாக்கத்தைச் சேர்ந்த மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி உள்பட இருவரிடம், அண்ணாநகரைச் சேர்ந்த வழக்கறிஞர் சுசில் ராஜ்குமார் என்பவர் திருமங்கலத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வீடு வாங்கி தருவதாகக் கூறியுள்ளார்.
இதை நம்பிய கிருஷ்ணமூர்த்தி, முன்தொகையாக வழக்கறிஞரிடம் 7 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். தன் மீது சந்தேகம் ஏற்படாத வண்ணம், வழக்கறிஞர் பணத்தை பெற்று கொண்டதற்கான வீட்டு வசதி வாரிய அலுவலக ரசீதையும் , குடியிருப்புக்கான ஒதுக்கீட்டு ஆணை ஆகியவற்றை அவர்களிடம் கொடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து, மருத்துவர் உள்பட இருவரும் அந்த ஆணையை எடுத்துக்கொண்டு திருமங்கலம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிக்கு சென்று வீட்டை ஆய்வு செய்தனர். அப்போது, அவர்களுக்கு ஒதுக்கீடு செய்த வீட்டில் வேறு நபர் குடியிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து வீட்டு வசதி வாரிய அதிகாரிகளிடம் விசாரித்தபோது, வழக்கறிஞர் சுசில் ராஜ்குமார் கொடுத்த ரசீது மற்றும் ஒதுக்கீட்டு ஆணை ஆகியவை போலியானது என தெரியவந்தது.
இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்த போலீசார், வழக்கறிஞர் சுசில் ராஜ்குமாரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.