சென்னை: ரவுடிகளால் காவல் துறையினர் தாக்கப்படும் சம்பவங்கள் வருத்தம் அளிப்பதாக உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
ரவுடிகளையும், சமூக விரோதிகளையும் ஒழிக்க கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று தெரிவித்த நீதிபதிகள், காவலர் உயிர் மட்டும் எதிர்க்கட்சிகளுக்கு உயிராக தெரியவில்லையா என்று கேள்வி எழுப்பினர்.
ரவுடிகள் இறக்க நேரிடும் போது காட்டும் அக்கறையை காவல்துறையினர் மீது ஏன் காட்டுவதில்லை என்றும் மனித உரிமை ஆணையத்துக்கும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் பல்வேறு ரவுடி குழுக்கள் குறித்த விவரங்களையும், அவர்களை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்தும் தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் விளக்கமளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
'மற்றொரு சாத்தான்குளம் சம்பவம் நடக்க வாய்ப்புள்ளது' - சென்னை உயர் நீதிமன்றம்!
மேலும், ஆறு மாத கைக்குழந்தையுடன் சிறுவயதில் மனைவியை பிரிந்து உள்ள காவலரின் இறுதி சடங்கிற்கு, காவல் துறை தலைமை இயக்குநர், காவல் துறை உயர் அலுவலர்கள், தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் மட்டுமே கலந்து கொண்டதாகவும், எதிர்க்கட்சியினர் கலந்து கொள்ளவில்லை எனவும் ஓட்டுக்காக அரசியல்வாதிகள் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பது இதன்மூலம் நிரூபணமாகிறது என்று தெரிவித்தனர்.
உயிரிழந்த காவலர்கள் குடும்பத்துக்கு முதலமைச்சர் 50 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கியதோடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க உத்தரவிட்டுள்ளதாக நினைவுகூர்ந்த நீதிபதிகள், அரசு நிர்வாகத்தை தாண்டி பிற அரசியல் கட்சிகளும் இது போன்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு முன்னின்று உதவினால் தான், நம்பிக்கையோடும், துணிவோடும் காவலர்கள் பணியாற்ற உத்வேகமாக அமையும் எனத் தெரிவித்தனர்.
மனித உரிமை ஆணையங்கள் ரவுடிகள் இறக்க நேரிடும் போது காட்டும் அக்கறையை, காவல் துறை மீது காட்டுவதில்லை என தெரிவித்த நீதிபதிகள், ரவுடிகளையும் சமூக விரோதிகளையும் ஒழிக்க கடுமையான சட்டம் இயற்ற வேண்டும் என உத்தரவிட்டது.
மேலும், இது தொடர்பாக இரண்டு வாரங்களில் தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் விரிவாக பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்