நாடு முழுவதும் குழந்தைகள் கடத்தல், பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையோடு செயல்பட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில், உத்தரப் பிரதேசம் மாநிலம் பதேபூர் மாவட்டத்தில் உள்ள கோட் கிராமத்தில் ஒருவர் சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றித்திரிந்துள்ளார். இதனைக்கண்ட பெண் ஒருவர் குழந்தை திருடன் என கூச்சலிட்டு அனைவரையும் அழைத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அந்த நபரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். பின்னர் இது குறித்து பாண்டா காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலையடுத்து விரைந்துவந்த காவல் துறையினர் அவரை மீட்டனர். அப்போதுதான் தெரிந்தது தாக்கப்பட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று.
தொடர்ந்து, காவல் ஆய்வாளர் கபில் தேவ் மிஸ்ரா கூறுகையில், "அந்த நபரால் தனது பெயர், முகவரி எதையும் சொல்ல முடியாத பரிதாபமான நிலையில் உள்ளார். அவரை கிராம மக்கள் குழந்தைத் திருடன் என தவறாக நினைத்து அடித்து உதைத்துள்ளனர். மேலும் குழந்தைத் திருடர்கள் பற்றிய வதந்திகளுக்கு செவிசாய்க்க வேண்டாம்" என கிராம மக்களிடம் கேட்டுக் கொண்டனர்.