மயிலாடுதுறை அருகே கருவிழந்தநாதபுரத்தில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வரும் மாணவி, தற்போது கரோனா காலத்தில் வீட்டில் இருக்கும்போது செல்போன் மூலம் முகநூல் பக்கத்தில் சிலருடன் பேசி வந்துள்ளார்.
இவர் அடிக்கடி முகநூல் பக்கத்தில் பெண்ணாகரத்தைச் சேர்ந்த ரங்கசாமி மகன் விக்னேஷ் (19) என்பவருடன் பழகுவதை பெற்றோர் கண்டித்துள்ளனர். ஆனால் விக்னேஷிவிடம் முகநூல் பக்கத்தில் தொடர்பு கொள்வதை சிறுமி நிறுத்தவில்லை.
இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் 5 ஆம் தேதி அன்று காலை 11 மணியளவில் அச்சிறுமி வீட்டிலிருந்து மாயமானார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் சிறுமியையும், சந்தேக நபர் விக்னேஷயும் தேடிவந்தனர்.
இந்நிலையில் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள் பென்னாகரத்தில் ஒரு வீட்டில் சோதனை செய்தபோது அங்கே சிறுமியும், விக்னேஷும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் இருவரையும் மயிலாடுதுறைக்கு அழைத்து வந்தனர். சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றதாக விக்னேஷ் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அவரை மயிலாடுதுறை கிளைச் சிறையில் அடைத்தனர்.
அந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையம் வந்து மகளை அழைத்த போது, சிறுமி செல்ல மறுத்ததால் அச்சிறுமியை பெண்கள் காப்பகத்தில் காவல் துறையினர் ஒப்படைத்துள்ளனர். மகள் தங்களுடன் வராததால் பெற்றோர் கவலையுடன் வீடு திரும்பினர். விக்னேஷ் பெங்களூருவில் சிப்ஸ் கடையில் வேலை பார்த்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க...‘என் சாவுக்கு காரணம் மனைவி’ - எழுதி வைத்துவிட்டு தொழிலாளி தற்கொலை!