திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தான் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதிபாசு. இவருடைய சிலிகான் மணல் ஏற்றுமதி நிறுவனத்தில் ஆசைத்தம்பி என்பவர் மேலாளராக வேலைபார்த்து வருகிறார். இவர் தனது உறவினர்களான இளையராஜா, ஜெயமாலினி ஆகிய இருவருக்கும் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறிய குகன் என்பவரிடம் ரூ.10 லட்சம் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. குகன் நாகை அதிமுக முன்னாள் எம்.பி. கோபாலின் மைத்துனர் ஆவார்.
இந்நிலையில் பணம் கொடுத்து 10 மாதம் ஆகியும் வேலை வாங்கித் தரவில்லை என ஆத்திரமடைந்த ஆசைத்தம்பி நேற்று குகனிடம் பணத்தை திரும்பக் கேட்டுள்ளார். இதில் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகவும் அருகிலிருந்தவர்கள் சிலர் ஆசைத்தம்பியை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதிலிருந்து தப்பிய ஆசைத்தம்பி ஜோதிபாசுவிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்தார். இதையடுத்து, ஜோதிபாசு, குகனை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இரவு குகன், அவரது மனைவி உள்பட 10-க்கும் மேற்பட்ட கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் வீட்டில் படுத்திருந்த ஜோதிபாசு, ஆசைத்தம்பியை அடித்து காரில் கடத்தியுள்ளனர்.
சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு பெருகவாழ்ந்தான் காவல் நிலையத்தில் தகவல் அளித்ததன் பேரில் காவல் துறையினர் மன்னார்குடி - முத்துப்பேட்டை சாலையில் தடுப்புகள் அமைத்து இரண்டு கார்களையும் மடக்கிப் பிடித்தனர்.
இதில் குகன் அவரது மனைவி உள்ளிட்டோர் தப்பியோடியபோது அன்புச்செல்வன், ரவிச்சந்திரன் என்ற இருவர் பிடிபட்டனர். தாக்குதலுக்குள்ளான ஜோதிபாசு, மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதையும் படியுங்க: