பழவந்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப் குமார். இவருக்கு வங்கியில் பணிபுரிய வேண்டும் என்ற எண்ணம் இருந்ததால் இவரது நண்பர் மூலமாக ராஜ் பரத் (35) என்பவரை அணுகியுள்ளார். இவர் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் இளநிலை அதிகாரி வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைக் கூறியுள்ளார். மேலும் இப்பணி கிடைக்க வேண்டுமென்றால் 3 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என்றும் பிரதீப் குமாரிடம் தெரிவித்துள்ளார்.
இதனை நம்பி 3 லட்ச ரூபாயை ராஜ் பரத்திடம் பிரதீப் கொடுத்துள்ளார். நீண்ட நாட்களாகியும் வேலை வாங்கித் தராததால், சந்தேகமடைந்த பிரதீப் குமார், ராஜ் பரத்தை தொடர்பு கொண்டபோது அவர் தலைமறைவாகிவிட்டார். பின்னர், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து முதலமைச்சரின் தனிப்பிரிவிலும் புகார் அளித்தார்.
இந்நிலையில், இந்த மோசடியில் தலைமறைவாக இருந்த ராஜ் பரத்தை நேற்று காவல் துறையினர் கைது செய்தனர். விசாரணையில், இதேபோல் வேலை வாங்கித்தருவதாகக் கூறி, ராஜ் பரத் பல பேரை ஏமாற்றியுள்ளதும், அவர்களிடம் மோசடியாக பல லட்சங்களை வாங்கியுள்ளதும் தெரியவந்தது. பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: கூடத்தாயி கொலை வழக்கு: சிறையில் ஜாலி தற்கொலை முயற்சி