தியாகராய நகர் மூசா தெருவில் உள்ளது உத்தம் மொத்த வியாபார நகைக்கடை. இக்கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கடந்த 20ஆம் தேதி இரண்டரை கோடி ரூபாய் மதிப்பிலான, ஏராளமான தங்க, வைர, வெள்ளி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதையடுத்து ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு, குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடிவந்தனர்.
சிசிடிவி காட்சிகள் ஆய்வு, பலகட்ட விசாரணையின் முடிவில், கோடம்பாக்கத்தைச் சேர்ந்த சுரேஷ் என்கிற மார்க்கெட் சுரேஷ், நகைகளைக் கொள்ளையடித்தது தனிப்படைக்குத் தெரிந்தது. இதையடுத்து தலைமறைவான மார்க்கெட் சுரேஷை தனிப்படை காவல் துறையினர் வலைவீசி தேடிவந்த நிலையில், திருவள்ளூரை அடுத்த புட்லூர் அருகே அவர் பதுங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்தது.
உடனடியாக அங்கு விரைந்த காவல் துறையினர், புட்லூர் கூவம் ஆற்றில் பதுங்கியிருந்த சுரேஷை கையும் களவுமாகப் பிடித்தனர். அவரிடமிருந்து 7 கிலோ வெள்ளி நகைகளைப் பறிமுதல்செய்ததோடு, கடம்பத்தூர் காவல் நிலையத்தில் வைத்து 4 மணி நேரம் விசாரணை நடத்தினர். பின்னர், வளசரவாக்கம், ராமாபுரம் காவல் துறையினர் மார்க்கெட் சுரேஷை விசாரணைக்காக சென்னைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இதையும் படிங்க: தி.நகர் நகைக்கொள்ளை - 5 தனிப்படைகள் அமைப்பு!