வேலூர்: தம்பதி இடையே ஏற்பட்ட தகராறில் மனைவி படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
வேலூர் மாவட்டம் சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த தினேஷ் (40) என்பவருக்கும், குடியாத்தம் அடுத்த வளத்தூர் பகுதியைச் சேர்ந்த மஞ்சுரேகா (28) என்பவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இச்சூழலில் கணவன் மனைவிக்கிடையே அவ்வப்போது ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக, ஐந்தாண்டுகளாக கணவனை பிரிந்து மஞ்சுரேகா அவரது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
கடந்த ஓராண்டாக தனியார் நிறுவனத்தில் மஞ்சுரேகா வேலை செய்துவந்த நிலையில், தினேஷ் அவ்வப்போது தகராறு செய்து வந்துள்ளார். அதேபோல் இன்றும் (அக்டோபர் 25) மஞ்சுரேகாவை சந்திக்க அவர் வேலை செய்யும் நிறுவனத்திற்கு தினேஷ் சென்றார்.
அங்கு இருவருக்கும் வாய் தகராறு முற்றி கைகலப்பு ஏற்பட்டது. இதில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தாக்கியதில், மஞ்சுரேகாவிற்கு கழுத்து, கை உள்ளிட்ட பகுதிகளில் வெட்டுக்காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். உடனடியாக அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மாதனுர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
தொடர்ந்து மருத்துவர்களில் பரிந்துரையின் அடிப்படையில், மேல் சிகிச்சைக்காக உயிருக்கு ஆபத்தான நிலையில் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து ஆம்பூர் காவல் துணை கண்காணிப்பாளர் சச்சிதானந்தம் தலைமையிலான கிராமிய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தனியார் நிறுவன உரிமையாளர் உத்திரகுமார், அந்த இடத்தின் உரிமையாளர் ராபர்ட் ஆகிய இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நேரத்தில், தப்பியோடிய தினேஷ் வேலூர் பாகாயம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். தற்போது காவல் துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.