சென்னை விமான நிலையத்திற்கு பெருமளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல்கள் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அலுவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
டெல்லியிலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பயணித்த பயணிகளிடம் சோதனை செய்தனர். அப்போது கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ராசிக் அகமது(45) என்பவரை நிறுத்தி விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாகப் பேசியுள்ளார்.
இதனால் அவரது உடைமைகளை சுங்கத்துறை அலுவலர்கள் சோதனை செய்தனர். அதில் தங்கக் கட்டிகள் இருந்ததையடுத்து, மேற்கொண்டு அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், டெல்லியில் ஒருவர் இந்த பார்சலை தந்து சென்னை விமான நிலையத்தில் ஒருவர் பெற்றுக் கொள்வார் எனக் கூறியதாக தெரிவித்தார்.
பார்சலை யாராவது வாங்க வாருவார்களா என்று கண்காணித்த போது யாரும் வரவில்லை. இதையடுத்து 2 கிலோ 330 கிராம் எடை கொண்ட 20 தங்கக் கட்டிகளைக் கைப்பற்றினர். இதன் மதிப்பு ரூ.92 லட்சத்து 33 ஆயிரம் ஆகும்.
அதேபோல் துபாய், சார்ஜாவிலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஹிக்கமத்துல்லா (40), நைனா முகமது (30), முஸ்தபா (27), முகமது நோவான்(23) ஆகியோரைச் சந்தேகத்தின் பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் நிறுத்தி விசாரித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் நால்வரும் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்துக் கடத்தி வந்ததைக் ஒப்புக் கொண்டனர். நான்கு பேரிடமிருந்து 60 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரு கிலோ 500 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.