நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை ரயிலடியில் உள்ள கிட்டப்பா நகரில் பல ஆண்டுகளாக கஞ்சா விற்பனை நடைபெற்றுவருகிறது. இதனால் குழந்தைகள், பெண்கள் பாதிக்கப்படுவதாகக் குடியிருப்புவாசிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இது குறித்து பலமுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேலும், இந்தப் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதால் இரவில் கஞ்சா அடித்துவிட்டு சமூகவிரோதிகள் தவறான செயல்களில் ஈடுபடுவதாகச் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் குற்றஞ்சாட்டினர்.
இது தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடம் வந்த மயிலாடுதுறை காவல் துறையினர், கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோரை கைதுசெய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து அப்பகுதி மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்துசென்றனர்.