திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள அத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் முரளி. இவர் தனது குடும்பத்தினருடன் புரட்டாசி மாதம் வழிபாட்டிற்காக திருப்பதிக்குச் சென்றிருந்தார். இந்த சூழலில் இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் முரளிக்கு இது குறித்து தகவல் அளித்தனர்.
அதன்பின் முரளி வீடு திரும்பியபோது, வீட்டிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 20 சவரன் தங்க நகைகள், 1.5 கிலோ வெள்ளி பொருட்கள், 40 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இது குறித்து முரளி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மீஞ்சூர் காவல் துறையினர் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு ஆய்வு மேற்கொண்டனர். அதில், நான்கு பேர் கொண்ட கும்பல் முதலில் முரளியின் பக்கத்து வீட்டிற்குச் சென்று கதவை உடைக்க முடியாத காரணத்தால் பின் முரளியின் வீட்டிற்கு வந்து நகைகளை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த மீஞ்சூர் காவல் துறையினர் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு நான்கு பேரையும் வலைவீசித் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க:தன்னைத்தானே கடத்திக்கொண்ட பப்ஜி வெறியன்!