தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே தத்துவாஞ்சேரி ஜாமிஆ பள்ளிவாசல் உள்ளது. இப்பள்ளிவாசலின் உட்புற, வெளிப்புற பகுதிகளில் உண்டியல், விலை உயர்ந்த ஒலிப்பெருக்கிகள், மைக்செட் உள்ளிட்டவைகள் உள்ளே இருந்துள்ளன. வழக்கம்போல் பள்ளிவாசலில் தொழுகை முடிந்த உடன் பள்ளிவாசல் கதவுகளை அடைத்து விட்டு ஜமாத் நிர்வாகிகள் சென்றனர்.
பின்னர் அதிகாலை ஜமாஅத் நிர்வாகிகள், கிராம மக்கள் தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு வந்தனர். அப்போது, பள்ளிவாசல் கதவு கடைப் பாறையால் உடைக்கப்பட்டு இருந்தது. பள்ளிவாசல் உள்ளே சென்று பார்த்த போது உண்டியல் உடைக்கப்பட்டு, அலுவலகத்தில் உள்ள பீரோ, பொருட்கள் உள்ளிட்டவை சிதறி கிடந்ததைக் கண்டு ஜமாத் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின் இதுகுறித்து திருப்பனந்தாள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலையடுத்து, காவல் ஆய்வாளர் கவிதா சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த இடத்தைப் பார்த்து அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்தார். பள்ளிவாசலில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கதவை உடைத்து உள்ளே புகுந்தது கேமராவில் பதிவாகி உள்ளது. அதன் பின் தஞ்சையிலிருந்து தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகையை ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் பள்ளிவாசலில் உள்ளே புகுந்த அடையாளம் தெரியாத நபரை, உடனடியாக கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிவாசல் நிர்வாகிகள், இளைஞர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து திருப்பனந்தாள் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அடையாளம் தெரியாத நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: காட்டுப் பன்றி வேட்டை: துறையூர் அருகே 6 பேர் கைது!