விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த சின்னநெற்குணம் கிராமத்தில் வசித்துவரும் அஞ்சலக ஊழியர் வெங்கடேசன் என்பவரின் வீட்டின் பின்புற கதவினை நேற்றிரவு (ஜன. 22) உடைத்து உள்ளே நுழைந்த முகமூடி அணிந்த ஆறு பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல் கத்தி முனையில் வெங்கடேசன் குடும்பத்தினர் அணிந்து இருந்த நகை, பீரோவில் இருந்த நகை உள்பட 17 1/2 சவரன் தங்க நகை, ரூ. 65 ஆயிரம் பணத்தையும் கொள்ளையடித்து சென்றது.
அதுமட்டுமின்றி, காவல்துறை, அக்கம்பக்கத்தினர் யாரையும் அழைக்கக் கூடாது என்பதற்காக வெங்கடேசன் குடும்பத்தினர் பயன்படுத்திய நான்கு செல்போன்களையும் பறித்து சென்றனர். மேலும், அதே பகுதியில் குமார் என்பவரது வீட்டின் முன்பக்க கதவிலிருந்த பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த முகமூடி அணிந்த அடையாளம் தெரியாத நபர்கள், கத்தி முனையில் 5 சவரன் தங்கநகைகள், 5 ஆயிரம் பணம், 3 செல்போன்களை பறித்து சென்றனர்.
அதைத் தொடர்ந்து, அருகே இருந்த குணசேகரன் என்பவரது பண்ணை வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள், வீட்டினுள் எதுவும் சிக்காததால் அங்கிருந்து வெளியேறி வெங்கடேசன் மற்றும் குமார் என்பவரது வீடுகளில் கைப்பற்றிய செல்போன்களை அங்கேயே தூக்கிவீசிவிட்டு தப்பி சென்றனர்.
இது குறித்து தகவலறிந்து வந்த மயிலம் காவல் துறையினர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், மோப்பநாய், தடயவியல் நிபுணர் வரவழைக்கப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அடுத்தடுத்த வீடுகளில் நுழைந்து முகமூடி அணிந்த அடையாளம் தெரியாத கும்பல் கத்தி முனையில் கொள்ளையடித்து சென்ற சம்பவம் திண்டிவனம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க...'இந்தியா உண்மையான நண்பன்' - தடுப்பூசி விநியோகத்துக்கு பாராட்டு தெரிவித்த அமெரிக்கா